ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை அவருக்கு, ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.
ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். ஜம்மு – காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, இவர், அம்மாநில கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகித்தார். அப்போது, கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நியமனத்தில் ஊழல் நடந்ததாகவும், அதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், ஏற்கனவே 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பரூக் அப்துல்லாவின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இந்நிலையில், 31ல் டில்லியில் உள்ள அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பரூக் அப்துல்லாவுக்கு, அமலாக்கத் துறை நேற்று சம்மன் அனுப்பியது.
இது குறித்து, தேசிய மாநாட்டு கட்சியினர் கூறியதாவது:-
நாட்டில் உள்ள எல்லா எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அமலாக்கத் துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் சம்மன் அனுப்புகின்றன. அந்த வரிசையில் பரூக் அப்துல்லாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்லும்படி வேறு எதுவும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.