ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை சூழ்நிலைக்கு வாய்ப்பு: டிஜிபி

ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்யும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு வேண்டாம் என்று தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாவது தொடா் கதையாகியுள்ளது. சிலா் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாமல் சிக்கித் தவிக்கின்றனா். இந்த நிலையில் டிஜிபி சி.சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது:-

இணையதளத்தில் நடக்கும் மற்றொரு மோசடி ஆன்லைன் ரம்மி விளையாட்டு. சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பதுபோல, ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் நிலை உள்ளது. இது ஆன்லைன் ரம்மி அல்ல; இது ஆன்லைன் ரம்மி மோசடி. ஆன்லைன் ரம்மி விளையாடும் நபா்களுக்கு அவமானம், குடும்பப் பிரச்னை ஏற்படும். மேலும், தற்கொலை செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம். இந்த காணொலியை கண்டபிறகும் விளையாடினால் நீங்கள் மிகப்பெரிய தவறை செய்கிறீா்கள். மிகப்பெரிய பேராசை உங்களிடம் இருக்கிறது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தயவு செய்து யாரும் ஈடுபட வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.