மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டாக முற்றுகையிட்டு வெற்றிகரமாக போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது பெங்களூருவில் கறுப்பு மை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுளனர்.
புதிய மூன்று வேளாண் சட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, விவசாயிகளின் தொடர்பு எதிர்ப்புகளுக்கு அடிபணிந்து திரும்ப பெற்றது. விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர், பாரதிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத். இவரது தலைமையில் லட்சக் கணக்கான விவசாயிகள் போராடியதைத் தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இத்தகைய தீரமிக்க விவசாயிகள் போராட்டத்துக்கு தலைமை வகித்தவர் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத். பஞ்சாப் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் விவசாய சங்கப் போராட்டங்கள் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தன. ராகேஷ் திகாயத், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில், கிராமப்புறங்களுக்கு உரிய மின்சாரம் விநியோகிக்கப்படுவதில்லை. கிராமப்புற விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைக்காவிட்டால் நகர்ப்புறங்களுக்கு மின்சாரம் கிடைப்பதை தடுத்து நிறுத்துவோம் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு, பாரதிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் வந்திருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு, அவர் செய்தியாளர்களை சந்திக்க தயாரானார். அப்போது அடையாள தெரியாத மர்ம நபர்கள், ராகேஷ் திகைத் மீது கருப்பு மை வீசினர். மேலும், மைக்கால் அவர் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இது குறித்து பாரதிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களது நிகழ்ச்சிக்கு உள்ளூர் காவல் துறையினர் எந்தப் பாதுகாப்பும் வழங்கவில்லை. இந்த தாக்குதல், மாநில பாஜக அரசுடன் ஒத்துழைப்புடன் நடந்துள்ளது” என குற்றம் சாட்டினார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.