ஆர்யன் கான் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் விசாரணை நடத்திய அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு, சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேரை என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அப்போது, மும்பை மண்டல என்.சி.பி., இயக்குனராக இருந்த சமீர் வான்கடே, இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இருப்பினும், விசாரணை சமயத்தில் இந்த வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வந்தது. இந்தச் சூழலில் போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிக்க என்சிபி அதிகாரிகள் ஷாருக் கானிடம் பேரம் பேசியதாகவும் இதில் மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கும் தொடர்பு இருப்பதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவர் ஆர்யன் கான் வழக்கிலிருந்து நீக்கப்பட்டு, மும்பை என்.சி.பி., தலைமையகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்த வந்த 6 கேஸ்களும் என்சிபி உயர் அதிகாரி சஞ்சய் சிங் தலைமையிலான சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சமீபத்தில் ஆர்யன் கானும் போதைப்பொருள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை முறையாக விசாரிக்கத் தவறிய முன்னாள் என்சிபி அதிகாரி சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் மத்திய அரசு நிதி அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டு இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் இப்போது சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.