உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று பல்வேறு ஊர்களில் திமுகவினர் தீர்மானங்களை நிறைவேற்றி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சியை அமைத்த சமயத்திலேயே, உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்த போதிலும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இருப்பினும், ஓரிரு ஆண்டுகளில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. சமீபத்தில் திமுகவில் பல ஊர்களில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், திமுகவை இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் அடுத்தகட்ட திட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என்று உதயநிதி நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாகச் சாடியுள்ளார். அதிமுக புரட்சி தலைவி அம்மா பேரவை உறுப்பினர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளாக நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொன்னையன், அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
திமுக உதயநிதி ஸ்டாலினை வைத்து நாடகம் நடத்தி வருகிறது. மாநிலத்தில் இப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது, பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்படவிட வேண்டும். திமுக ஆட்சியில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் நடவடிக்கை இருக்காது என சமூக விரோதிகள் நினைக்கத் தொடங்கி விட்டனர். கட்சி நிர்வாகிகளின் தலையீடுகள் இருக்கும்போது காவல்துறை எப்படி பணிபுரிய முடியும். சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது அனைவருக்கும் தெரியும். இதை யாராலும் மறைக்க முடியாது. சட்டம் ஒழுங்கை சிறப்பாகக் கையாண்ட அரசு அதிமுக அரசு என்பதைத் தங்கம் தென்னரசு மறைக்கிறார். ஆனால், இப்போது நிலைமை வேறு. காவல்துறையும் அரசாங்கமும் தங்கள் கடமையைச் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.