அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை!

தென்மேற்கு பருவமழை கால பேரிடரை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கினார்.

தென்மேற்கு பருவமழை குறித்த ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் தலைமை செயலகத்தில் உயர் அலுவலர்களுடன் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைச்செயலாளர் பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். அவர் கூறியதாவது:-

பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும். வடிகால்கள் மற்றும் ஏரி குளங்களை தூர்வார நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தயாரிக்க வேண்டும். வெள்ள அபாய காலத்தில் அனைத்து துறைகளும் உபரி நீரை வெளியேற்றும் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூடுதலாக நீரை தேக்கி வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்கி, வெள்ள அபாயத்தை தடுக்க வேண்டும். ஆற்று முகத்துவாரங்களை அகலப்படுத்தினால் வெள்ள நீர் எளிதாக கடலை சென்றடையும். பேரிடர் பயிற்சிகள் நீர்வழி பாலங்களை உடனடியாக தூர்வார வேண்டும். நீர் வழிகளின் கரைகளை பலப்படுத்த போதுமான மணல் மூட்டைகளை இருப்பு வைக்க வேண்டும். சமுதாய உணவு கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வெள்ளக்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் போதுமான உணவு பொட்டலங்கள் தங்கு தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய ஏதுவாக தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். முறையான திடக்கழிவு மேலாண்மை மற்றும் ஆகாயத்தாமரை அகற்றுதல் மூலம் நீர்வழித்தடங்களில் ஏற்படும் அடைப்பு குறைக்கப்பட வேண்டும். பேரிடர் பயிற்சிகளை ஒத்திகைகள் முழுவீச்சில் நடத்த வேண்டும். வெள்ள நீரை வெளியேற்றும் பம்பு செட்டுகள் மற்றும் பிற உபகரணங்களின் செயல்பாடுகள் முன்னரே பரிசோதித்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.

மழை மற்றும் வெள்ளக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய் குறித்து சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். வெள்ள காலங்களில் கால்நடைகளை கட்டி வைத்திருப்பதை தவிர்க்கும்படி சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெள்ள காலத்தில் மக்களை வெளியேற்றும்போது தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மீட்பு பணி நடவடிக்கைகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். புயல் பாதுகாப்பு மையம் புயல் பாதுகாப்பு நிவாரண மையங்கள் மற்றும் கூடுதல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் முககவசம், தனிமனித இடைவெளி மற்றும் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

பேரிடருக்கு பின்பு மீட்பு பணிகளில் ஈடுபடும் திறமையான குழுக்களை அனைத்துறைகளும் கண்டறிந்து தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். அணைக்கட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பல்வேறு துறை செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள், ராணுவம், விமானப்படை, கப்பல்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புபடை உள்ளிட்ட மத்திய அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர்.