வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக இன்றுமுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2000 கன அடிநீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்றுமுதல் நிறுத்தப்பட்டது. இதன்மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பூர்வீக பாசன பகுதி 1 மற்றும் 2-ல் உள்ள கண்மாய்களுக்கு 582 மி.கனஅடியும், பகுதி 3-ல் உள்ள கண்மாய்களுக்கு 267 மி.கனஅடியும் தண்ணீர் சென்றது.

இந்நிலையில் மதுரை, தேனி, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருபோக பாசன நிலங்களில் முதல் போகத்திற்கு வைகை அணையில் இருந்து 900 கனஅடி வீதம் கால்வாய் வழியாக திறக்கப்பட்டது. இந்த நீர் 120 நாட்களுக்கு திறக்கப்படுகிறது. இந்த நீர் 45 நாட்களுக்கு 900 கனஅடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும், 6739 மி.கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டத்தில் 43244 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி, தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உள்பட அரசு அதிகாரிகள், பொதுப்பணித்துறையினர், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தண்ணீர் திறக்கப்பட்டதும் மதகு வழியாக வெளியேறிய நீரில் அவர்கள் மலர்தூவி வழிபட்டனர்.

இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 62.50 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. அணையில் இருந்து பாசனத்திற்கு 900 கனஅடியும், குடிநீருக்கு 69 கனஅடியும் என மொத்தம் 969 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.