ஆன்லைன் விளையாட்டு, மறைமுக லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது:-
இணையதள விளையாட்டு என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்டவைத்து, பிறகு பந்தயமாக மாற்றி, தொடர்ந்து விளையாடச் செய்து சூதாட்டத்திற்கு அடிமையாக்கக் கூடியதாகவும்; விபரீத விளைவுகளை உருவாக்கக் கூடியதாகவும்; உயிருக்கே ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியதாகவும் ஆன்லைன் விளையாட்டுகள் விளங்குகின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்துமே ஒருவிதமான சூதாட்டம் தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
ஆன்லைன் விளையாட்டு வாயிலாக மோசடி நடப்பதாகவும், முதலில் ஆசையைத் தூண்டும் வகையில் பணம் கொடுக்கப்படும் என்றும், பின் கட்டிய பணம் எல்லாம் சூறையாடப்படும் என்றும், இது ஆன்லைன் விளையாட்டு அல்ல என்றும், இது ஆன்லைன் மோசடி என்றும், இதன் காரணமாக பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம் என்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவே வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அண்மையில் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. போலீஸ் டி.ஜி.பி.யே இதுபோன்று தெரிவிக்கையில், சுப்ரீம் கோர்ட்டை அணுகி இதனை உடனடியாக தடை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு முனைப்புடன் செயல்படாதது வருத்தம் அளிக்கும் செயலாகும்.
எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, சுப்ரீம் கோர்ட்டிலுள்ள வழக்கினை விரைவுபடுத்தி, ஆன்லைன் விளையாட்டிற்கு தடை பெறவும்; மறைமுக லாட்டரி விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை சீர்செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.