டிவி விவாதத்தின் போது, மதத்தை பற்றி அவதுாறாக கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறி, உ.பி., மாநிலம் கான்பூரில் ஒரு தரப்பினர் கடைகளை அடைக்கும்படி கூறியதால் கலவரம் ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் தனியார், ‘டிவி’ சேனலில் நடந்த விவாதத்தின் போது, பா.ஜ., சார்பில் பங்கேற்ற ஒருவர், முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கான்பூர் மாவட்டத்தில் ஒரு தரப்பினர், கடைகளை அடைக்கும்படி கட்டாயப்படுத்தினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பல இடங்களில் நேற்று வன்முறை ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசியும், கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 18 பேரை கைது செய்தனர். இதையடுத்து கலவரம் கட்டுக்குள் வந்தாலும், தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ காட்சிகள் வாயிலாக அடையாளம் கண்டுபிடித்துள்ளோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வன்முறையில் இருவர் காயம் அடைந்துள்ளனர் என்றனர்.