உத்தரப்பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் அகமதுகார் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எருமை மாட்டை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
சந்திரபால் காஷ்யப், என்ற தொழிலாளி, தனது 3 வயது எருமைக் கன்று கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், பீன்புர் கிராமத்தில் 2020, நவம்பர் மாதம் அந்த எருமை மாட்டை கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அது தன்னுடைய எருமை மாடு என்று சத்பீர் சிங் கூறியுள்ளார். கொரோனா பேரிடர் காலம் என்பதால், இந்த வழக்கு அப்படியே நிலுவையில் போடப்பட்டது. தற்போது ஷாமிலி காவல்துறை கண்காணிப்பாளர் சுக்ரிதி மாதவ் கையில் இந்த வழக்கு விசாரணை வந்தது. உடனடியாக எருமை மாட்டுக்கும், அதனை உரிமை கொண்டாடும் உரிமையாளர்களிடம் இருக்கும் அதன் தாய் மாடு என்று கூறப்படும் இரண்டு எருமை மாடுகளுக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். எருமையின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிவது கடும் பிரச்னையாக இருந்தது. எனவே டிஎன்ஏ பரிசோதனை உத்தரவிடப்பட்டது.
தனது எருமைமாடுதான் அது என்பதை காஷ்யப் எவ்வாறு கண்டுபிடித்தார் என்று அவரிடம் கேட்டபோது, மனிதர்களைப் போலத்தான், விலங்குகளுக்கும் சில தனித்த அடையாளங்கள் இருக்கும். எனது எருமைக் கன்றின் இடது காலில் ஒரு கறை போன்று இருக்கும். வாலின் நுனியில் வெள்ளி நிறம் காணப்படும். மூன்றாவது எருமை மாட்டின் நினைவாற்றல். அது என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டு என்னிடம் ஓடி வர முயன்றது. இதைத் தவிர, என் எருமை மாட்டைக் கண்டறிய வேறென்ன வேண்டும்? என்கிறார்.
விலங்குகளின் டிஎன்ஏ-வை பரிசோதிக்க உத்தரப்பிரதேசத்தில் எந்த ஆய்வகமும் இல்லை. கால்நடை மருத்துவமனையிலிருந்து கடந்த வியாழக்கிழமை வந்து டிஎன்ஏ மாதிரிகளை எடுத்துச் சென்றனர். அது குஜராத் அல்லது டெல்லியில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.