கபீா் தாஸின் போதனைகள் இன்றைக்கும் பொருந்துகின்றன: ராம்நாத் கோவிந்த்

ஆன்மிக கவிஞரும் துறவியுமான கபீா் தாஸின் போதனைகள் இன்றைய நவீன காலத்துக்கும் பொருந்துவதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், கோரக்பூரிலிருந்து சந்த் கபீா் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அங்கு சந்த் கபீா் அகாதெமி, ஆராய்ச்சி மையத்தை அவா் திறந்துவைத்தாா். இந்த மையத்துக்கு பிரதமா் மோடி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து மகா் பகுதியில் உள்ள பக்தி இயக்க துறவி கபீா் தஸின் சமாதி ஸ்தலத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தி, மரக்கன்று நட்டுவைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:-

650 ஆண்டுகள் கடந்த போதிலும் கபீா் தாஸின் போதனைகள் இன்றைய நவீன காலத்துக்கும் பொருந்துகின்றன. ஒடுக்கப்பட்டோரின் மீது அன்பு செலுத்தினால் மட்டுமே மனிதாபிமானம் தழைக்கும் என கபீா் தாஸ் வலியுறுத்தினாா். அவா் முறையான கல்வி கற்கவில்லை. ஆனால், துறவிகளுடன் பழகி அனுபவரீதியாக ஞானம் பெற்றாா். துண்டாடப்பட்ட சமுதாயத்தின் ஆன்மாவை கபீா் தாஸின் போதனைகள் அசைத்தன. அந்நிய படையெடுப்பாளா்களால் இந்தியா பாதிக்கப்பட்ட நேரத்தில், அன்பு, பக்தி, நல்லிணக்கத்தின் செய்தியை கபீா் தாஸ் பரப்பினாா். பொதுமக்களுடன் அந்தந்த வட்டார மொழியில் உரையாடினாா். ஜாதி, மதத்தின் பெயரால் பிரிந்து கிடக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்புவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.