வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு “No work No pay” என்ற அடிப்படையில் சம்பளம் பிடிக்கப்படும் என, தமிழக அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் 9 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு “No work No pay” என்ற அடிப்படையில் சம்பளம் பிடிக்கப்படும் என, தமிழக அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் (SRG8/2019) தங்களது 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 07.06.2022 முதல் 09.06.2022 வரை மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக அச்சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்து உள்ளார்.
மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தம் போரட்டத்தில் அனைத்து மண்டலங்களில் பணிபுரியும் நியாய விலைக் கடைப் பணியாளர்கள் கலந்துக் கொள்ள வாய்ப்பு உள்ளதால், 07.06.2022 முதல் 09.06.2022 வரை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறும், பொது விநியோகத் திட்டப் பணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படா வண்ணம், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொண்டு அனைத்து நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு “No Work No Pay” என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.