சிறுவாச்சூரில் கோயில் திருப்பணிகளுக்காக முறைகேடாக பணம் வசூலித்த விவகாரத்தில் யூடியூப்பர் கார்த்திக் கோபிநாத் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிகளாக முறைகேடாக பணம் வசூலித்து, அதனை கோயில் பணிகளுக்கு பயன்படுத்தலாம் வேறு நோக்கத்திற்கு பயன்படுத்தியதாக பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத்திற்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் பேரில் கடந்த மே 29-ம் தேதி கார்த்திக் கோபிநாத் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீன் கோரிய கார்த்திக் கோபிநாத் மனுவும், போலீசார் காவலில் எடுக்க கூடிய மனுவும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. போலீசார் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. அதேபோல் இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் எனவும் கார்த்திக் கோபிநாத் தனியாக மனு அளித்திருந்தார்.
கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நன்கொடை வசூலை தொடங்கிய 3 நாட்களில் ரூ.33,28,926 வசூல் செய்யப்பட்டதாகவும், அதன் பிறகு யாரும் நன்கொடை அனுப்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை என்பது நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசரணைக்கு வந்தது.
கார்த்திக் கோபிநாத்தை விசரணைக்கு எடுக்க அனுமதி மறுத்த பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவு எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததாவது; சிதிலமடைந்த கோயிலின் காட்சிகளை வெளியீட்டு மக்களிடம் அனுதாபம் தேடி பணம் வசூல் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடைசி வழக்கில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டார். பணம் வசூல் தொடர்பாக அறநிலையத்துறை ஆணையரிடம் எந்தஒரு அனுமதிக்கும் பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வசூல் செய்த பணத்தில் ரூ.2 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், அவருக்குஉடந்தையாக இருந்தவர்கள், பணப்பரிமாற்றம் குறித்தும் பல்வேறு விவரங்களை இன்னும் சேகரிக்க வேண்டும் அதனால் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆனால் கார்த்திக் கோபிநாத் தரப்பில், அவர் எந்த முறைகேடும் செய்யவில்லை என்றும், வசூல் செய்த பணத்துக்கு தான் முழுவதுமாக கணக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அவருடைய தனிப்பட்ட கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு அளிக்க வேண்டும் எனவும், அதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனு மீது நாளை முடிவெடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.