பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுர் சர்மா ஜூன் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மகாராஷ்டிர காவல்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
பாஜக டெல்லி ஊடகப் பிரிவு தலைவா் நவீன் குமாா் ஜிண்டால் ட்விட்டரிலும், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா தொலைக்காட்சி விவாத மேடையிலும் நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய பதிவுகளை வெளிப்படுத்தியதற்காக கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டனர்.
இவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, ஐக்கிய அரபு அமீரக நாடுகள், ஓமன், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட 15 நாடுகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இருவர் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், மகாராஷ்டிர காவல்துறையினர் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர். காவல்துறை அனுப்பியுள்ள சம்மனில், வரும் ஜூன் 22ஆம் தேதி நேரில் ஆஜராகி மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியது குறித்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக நூபுர் சர்மா புகார் தெரிவித்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து அவருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.