உக்ரைனில் படித்த மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வந்த மாணவர்கள் படிப்பை பாதியிலேயே கைவிட்டு இந்தியா திரும்பினர். இவர்களில் மருத்துவம் படித்து வந்தவர்கள் 14 ஆயிரம் பேர் என்றும், அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 1,896 பேர் என்றும் தமிழ்நாடு உக்ரைன் எம்.பி.பி.எஸ். மாணவர்-பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாமல் தவித்து வருவதாகவும், இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவ, மாணவிகள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தொடர்ந்து மருத்துவம் பயில அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களது நிலையில்லாத எதிர்காலத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் கடிதம் எழுதியிருந்தார். இதன்பிறகு பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆதரவாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ அல்லது அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி சாதகமான உத்தரவுகளை பெற்று வரவோ எந்தவித முயற்சியையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இதில் இருந்து தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதும், சம்பிரதாயத்துக்காக கடிதம் எழுதி இருப்பதும் தெளிவாகிறது. எனவே, உக்ரைனில் பாதியிலேயே மருத்துவ படிப்பை விட்டு வந்த மாணவ, மாணவிகள் இந்தியாவில் அதனை தொடரும் வகையில் மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழக அரசு கொடுத்து சாதகமான உத்தரவை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.