விசிகவின் அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக மாநில முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருவோரை கௌரவிக்கும் வகையில், விசிக சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விவரங்களை விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அரசியல், சமூகம், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றிவரும் ஆளுமைகளுக்கு ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’ உள்ளிட்ட விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருதுக்கு கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விருது பெறுவோர் பெயர் விவரம்:
அம்பேத்கர் சுடர் விருது – கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
பெரியார் ஒளி விருது – எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை
காமராசர் கதிர் விருது – வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம்
அயோத்திதாசர் ஆதவன் விருது – இந்திய ஆட்சிப்பணி அதிகாரி செல்லப்பன்
காயிதேமில்லத் பிறை விருது – எஸ்.டி.பி.ஐ தலைவர் தெகலான் பாகவி
செம்மொழி ஞாயிறு விருது – தொல்லியல் அறிஞர் பேரா.கா.ராசன்
மார்க்ஸ் மாமணி விருது – மறைந்த எழுத்தாளர் ஜவஹர்
விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் நாள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.