டெல்லியில் வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவின் நிறுத்தியிருந்த கார் ஜன்னலை உடைத்து லேப்டாப், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியின் ரோகிணி பகுதியில் பிரிவு 7ல் நிறுத்தப்பட்ட இந்திய வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவின் காரில் இருந்த விலை மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு உள்ளன. இதுபற்றி அபிஷேக் கூறும்போது, என்னுடைய மனைவி இரவு 7.30 மணியளவில் அலுவலகத்தில் இருந்து பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் ஷாப்பிங் செய்ய சென்றார். இதற்காக ஆடி காரை அதற்கான இடத்தில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். ஆனால், திரும்பி வந்து பார்க்கும்போது, காரின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, லேப்டாப் ஒன்று, சில ஆவணங்கள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டு விட்டன என கூறியுள்ளார்.
இதுபற்றி போலீசிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் கூறும்போது, சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. இ-ரிக்ஷா ஒன்று காரை நெருங்கி வந்துள்ளது. அதில் இருந்து, 7 பேர் வரை இறங்கி சென்றுள்ளனர். இதன்பின்னர் அவர்கள் காரின் ஜன்னலை உடைத்து, லேப்டாப் பையை திருடி சென்றுள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளனர்.