அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து சுமார் 1502 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் வருங்கால நலன் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் வருங்கால நலன் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதாவது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஒய்வுபெறும் வயது வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, இறந்து போன தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்காலப் பணப்பலன்கள் அவ்வப் போதே வழங்கப்பட்டால் தான் பணிபுரிந்ததற்கு பலன் கிடைக்கும். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் இன்னும் வழங்கப்படாதது நியாயமில்லை.
85,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் பெரும் பொருளாதார சிரமத்தில் வாழ்கிறார்கள். கடந்த மே மாதம் 31-ந் தேதியன்று அரசுப் போக்கு வரத்துக் கழகங்களில் இருந்து சுமார் 1502 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கும் பணப்பலன்கள் கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதே சமயம் மின் வாரியம் உள்ளிட்ட பிற பொதுத் துறைகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு சேமநலநிதி, பணிக்கொடைத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
தி.மு.க கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிக்கையில் அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களுக்குள் வழங்கப்பட்டு விடும் என்றும் உறுதி அளித்தது. ஆனால் இன்னும் அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவில்லை. எனவே அரசுப் போக்கு வரத்துக்கழகங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களின் குடும்ப நலனை கவனத்தில் கொண்டு, தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன்கள் காலத்தே கிடைப்பதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.