தமிழகத்தில் அ.தி.மு.க.வே பிரதான எதிர்கட்சி: எடப்பாடி பழனிசாமி

பல ஆண்டு காலமாக நடந்து வந்த பட்டின பிரவேச நிகழ்ச்சியை தி.மு.க. அரசு வேண்டுமென்றே தடை செய்ய முயற்சி செய்தது. அதனை கண்டித்து அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்த பிறகே தடையை விலக்கியது.

மயிலாடுதுறையில் இன்று அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமண விழாவை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார். முன்னதாக அவர் மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்டா பாசன விவசாயிகளுக்கு வெள்ள காலங்களிலும், வறட்சி காலங்களிலும் உடனடியாக நிவாரணத்தையும் இழப்பீடும் வழங்கியது அ.தி.மு.க அரசு தான். விவசாயிகளை பாதுகாக்க டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் அ.தி.மு.க. அரசு தான். ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான கையெழுத்திட்டது தி.மு.க. என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு ஆய்வு குறித்து அறிக்கை அளிக்காதது ஏன் என்ற கேள்விக்கு மதம், கோவில் சம்பந்தப்பட்டது. முழு விவரம் தெரிவிக்கப்பட்ட பின்னர்தான் அறிக்கை வெளியிட முடியும் என்கின்றனர். எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும். மதத்திற்குள் யாரும் நுழையக்கூடாது. ஒவ்வொரு கோவிலுக்கு என்று வழிமுறைகள் இருக்கிறது. அதற்கென்று சட்டரீதியாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆதீனத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. அரசு மூக்கை நுழைக்க பார்க்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. பல ஆண்டு காலமாக நடந்து வந்த பட்டின பிரவேச நிகழ்ச்சியை தி.மு.க. அரசு வேண்டுமென்றே தடை செய்ய முயற்சி செய்தது. அதனை கண்டித்து அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்த பிறகே தடையை விலக்கியது.

தமிழகத்தில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்துமே எதிர்க்கட்சிகள் தான். ஆனால் அ.தி.மு.க.வே பிரதான எதிர்கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.