ஜனாதிபதி தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கூட்டு ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அரசியலமைப்பு கிளப்பில் வருகிற 15-ந்தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் எதிர்கட்சி சார்பிலும் பொது வேட்பாளர்களாக யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 51 சதவீத ஓட்டுகள் தேவை. இதில் ஆளும் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்த்து 49 சதவீத ஓட்டுகள் உள்ளன. ஆனாலும் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற பாரதிய ஜனதா முனைப்பு காட்டி வருகிறது.

இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொள்ள துவங்கி உள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடமும் கம்யூனிஸ்டு தலைவர்களிடமும் பேசி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் வகுப்பது தொடர்பாகவும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பதற்காக மேற்கு வங்காள முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கூட்டு ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அரசியலமைப்பு கிளப்பில் வருகிற 15-ந்தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்களை வருகிற 15-ந்தேதி வரவழைத்து சந்தித்து பேச திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் அதே நாளில் மம்தா பானர்ஜியும் டெல்லியில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். எனவே இதில் காங்கிரஸ் பக்கம் செல்வதா? அல்லது மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்பதா? என்பது பற்றி முடிவு செய்ய தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சருடன், பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராஜா, பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 20 நிமிட நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனையில் சோனியா அழைப்பை ஏற்று அவர் சொல்லும் வேட்பாளரை ஆதரிக்கலாமா? என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் நடத்தும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் 15-ந்தேதி காலையில் 10 மணிக்கு நடைபெறுகிறது. அதே நாளில் டெல்லியில் 15-ந்தேதி மதியம் 3 மணிக்கு மம்தா பானர்ஜியின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் இரு தரப்பு கூட்டங்களும் ஒரே நாளில் நடைபெறுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. எனவே இதில் யாருடைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது என்பது பற்றி இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்து கட்சி சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.