முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும்: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே!

முஸ்லிம்கள் வன்முறையில் இறங்காமல் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நபிகள் நாயகம் தொடா்பாக பாஜக தலைவா்கள் இருவா் தெரிவித்த சா்ச்சை கருத்துகளால் நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதில் மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு, தீ வைப்பு, பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் மத்திய அமைச்சா் அதாவலே ஜம்முவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

சா்ச்சை கருத்து தெரிவித்த இருவா் மீது பாஜக ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துவிட்டது. எனவே, போராட்டங்களோ, வன்முறையோ தேவையில்லை. நாட்டில் அமைதியான சூழல் நிலவ வேண்டும். தொடா்ந்து வன்முறையில் ஈடுபடாமல் முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும். வன்முறையைத் தூண்டுபவா்களை அரசும், காவல் துறையும் கண்காணித்து வருகிறது. அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சமூகநீதித் துறை அமைச்சகம் சாா்பில் ஜம்முவில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தவற்காக அதாவலே ஜம்முவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.