திமுக செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட முயற்சி செய்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

கட்சத்தீவு பிரச்சினை குறித்து பிரதமர் முன்னிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசியது தி.மு.கவினர் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் முயற்சியாகவே உள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டியில் மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளில் 7 கோடி பேருக்கு மட்டுமே வங்கி கணக்கு இருந்தது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் எந்தவித செலவும் இல்லாமல் 45 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கி வைத்தவர் பிரதமர் மோடி. இரண்டரை கோடி பேருக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளார். மின்சாரம் இல்லாமல் இருந்த 18 ஆயிரம் கிராமங்களுக்கு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 1000 நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மின் சிக்கனத்தை கடைபிடிக்க சூரியஒளி திட்டம் பரவல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகள் பயமுறுத்திய நிலை மாறி இந்தியாவை கண்டு அந்த நாடுகள் பயப்படும் நிலையை மோடி உருவாக்கி உள்ளார். எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டிற்கு இந்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசியை இலவசமாக செய்து நமது உயிரை காப்பாற்றியவர் மோடி. தி.மு.க ஓராண்டில் எண்ணற்ற சாதனைகளை முடித்துள்ளதாக தம்பட்டம் அடித்து கொண்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுப்பதாக கூறியவர்கள் இன்னும் அதனை தராமல் ஏமாற்றி வருகின்றனர். ஒரு லட்சம் இலவச மின்இணைப்பு வழங்கியதாக விழா எடுத்தனர். ஆனால் ஒருவருக்கும் அது கிடைக்கவில்லை. கட்சத்தீவு பிரச்சினை குறித்து பிரதமர் முன்னிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசியது தி.மு.கவினர் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் முயற்சியாகவே உள்ளது. பொய்யாக நாடகம் ஆடுபவர்களை நம்பாமல் பிரதமர் மோடியை நம்பினால் நமது நாடு உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு முன்னேறும். இவ்வாறு அவர் பேசினார்.