யோகி ஆதித்யநாத் தலைமை நீதிபதியாகிவிட்டாரா?: ஓவைசி

உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போல் செயல்பட்டது கண்டனத்துக்குரியது என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டினார்.

நுபுர் சர்மாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென வன்முறை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, போலீசாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. வன்முறை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸ் கைது செய்தது. இதனையடுத்து, மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரயாக்ராஜில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணமாக முக்கிய நபரான ஜாவேத் முகமதுவின் வீட்டை பிரயாக்ராஜ் வளர்ச்சி ஆணையம், போலீஸ் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியது. அவர் வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதியைப் பெறவில்லை என்றும் அதன் காரணமாகவே அந்த வீட்டை இடித்ததாகவும் பிரயாக்ராஜ் வளர்ச்சி ஆணைய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து குஜராத்தில் முகாமிட்டுள்ள அசாதுதீன் ஒவைசி கூறுகையில், “உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இப்போது உத்தரபிரதேச மாநிலத்தின் தலைமை நீதிபதியாகிவிட்டார்; இனிமேல் யாருடைய வீட்டை இடிக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். உத்தர பிரதேசத்தில் உள்ள நீதிமன்றங்களை பூட்டிவிடலாம். இனிமேல் மக்கள் நீதிமன்றம் தேவையில்லை என்பதால், நீதிபதிகளும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம். காரணம், அம்மாநில முதல்வரே யார் குற்றவாளி என்பதை முடிவு செய்வார்” என்றார்.

முன்னதாக நேற்று ஜாவேத்தின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்த விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, அம்மாநில வழக்கறிஞர்கள் குழு கடிதம் எழுதியுள்ளது. இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் அல்ல என்றும், அந்த வீடு ஜாவேத்தின் மனைவியின் பெயரில் உள்ளது என்றும் கூறியுள்ளனர். மேலும், இந்த வீட்டை இடித்தது சட்டத்துக்கு எதிரானது என்றும், குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவிக்கு சட்டவிரோத கட்டுமானம் குறித்து எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.