தனியார் பள்ளி மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும். டிசி தர மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-
தனியார் பள்ளி மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும். டிசி தர மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறோம். வரும் கல்வி ஆண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளதால் 11,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்து 5 நாட்கள் வகுப்புகள் நடக்காது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல்துறை அதிகாரிகள் மூலம் தினமும் 2 மணி நேரம் உளவியல் பயிற்சிகள் வழங்கப்படும். மாணவர்கள் தற்போது 90% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தாத 10% பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாம் கொடுத்த அழுத்தத்தினால் தான் ஆளுநர் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். எந்த சட்ட போராட்டமாக இருந்தாலும் முதலமைச்சர் அதில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.