முதல்வர் ஆய்வுக்கு செல்லும்போதெல்லாம் குற்றம் அதிகரிக்கிறது: அண்ணாமலை

முதல்வர் போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வுக்கு செல்லும் போதெல்லாம் தமிழகத்தில் குற்றம் அதிகரிக்கிறது என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் அமலாக்கத்துறை இயக்குனர் ராகுலை விசாரணைக்கு அழைத்ததற்கு காங்கிரஸ், எம்.பி.,கள் கூச்சலிட்டு, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை சோனியா மற்றும் ராகுல் கையகப்படுத்தியுள்ளனர்; இதை விசாரிக்க அழைத்தால் இத்தனை நாடகம்.

‘கையை வெட்டி விடுவேன்’, ‘சுழுக்கெடுத்து விடுவேன்’ என, பேசும் தி.மு.க., அமைச்சர்களை வைத்துக்கொண்டு, பா.ஜ., தொண்டர்களை குண்டர்கள் என்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. முதல்வர் அமைச்சரவையை கூட்டி, ‘ஊழல் செய்யாமல் மக்களுக்கு வேலை செய்யுங்கள்’ எனக்கூறினால் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

காவல் துறையில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக உள்ளது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், ஏழு ‘லாக்கப்’ மரணங்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. கூட்டு பலாத்காரம் போன்ற பெரிய தவறுகள் நடப்பது, காவல் துறையின் செயலின்மையை காட்டுகிறது. முதல்வர் அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வு செய்கிறார். ஆய்வுக்கு சென்ற பின் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

கோவை மாநகராட்சி கூட்டத்தில், 11வது வார்டு ஆளுங்கட்சி கவுன்சிலர் பழனிசாமி, ‘இந்த ஆட்சி சரியில்லை; நான் ராஜினாமா செய்வேன்’ என, கூறியுள்ளார். கோவை மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மோசமாக உள்ளது. மத்திய அரசு நிதியில் கட்டிய பாலங்களை திறக்காவிட்டால் நான் திறப்பேன் என, பா.ஜ., மாவட்ட தலைவர் கூறியதும், அமைச்சர் ஓடிவந்து இங்கு பாலம் திறக்கிறார். தமிழகத்தில் கஞ்சா புழக்கம், அனைத்துவித போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் உதயநிதியுடன் சுற்றுகிறார். எப்படி ஒரு பள்ளிகல்வித்துறை அமைச்சர் இருக்க கூடாதோ, அதற்கு சான்றாக, சாட்சியாக அவர் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.