கருப்பு முக கவசம் அணிய தடை இல்லை என்றும், பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக சுவப்னா சுரேஷ் புகார் கூறினார். இதையடுத்து பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளாவின் பல பகுதிகளில் பினராயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், எதிர்கட்சியினர் கருப்பு கொடி காட்டியும், கருப்பு உடை அணிந்தும், கருப்பு நிற முக கவசம் அணிந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதைதொடர்ந்து கருப்பு முக கவசம், கருப்பு உடை அணிய தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும் தேவையில்லாமல் போலீசார் முதல்-மந்திரி செல்லும் வழிகளில் பொதுமக்களின் போக்குவரத்தை முடக்குவதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று கண்ணூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்- மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடை அணிய உரிமை உண்டு. அதே போல் கருப்பு நிற முக கவசம் அணிய எந்த தடையும் இல்லை. இதுதொடர்பாக பொய்யான பிரசாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை. அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். கேரளாவில் சாலையில் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அதனை தடுக்க எந்த சக்திக்கும் அதிகாரம் இல்லை என்று அவர் கூறினார்.
இதற்கிடையே நேற்று திருவனந்தபுரத்தில் பா.ஜனதா மகிளா மோர்ச்சா பெண்கள் அமைப்பினர் கருப்பு உடை அணிந்து வந்து முதல்-மந்திரிக்கு எதிராக பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் கண்ணூர் தளிப்பரம்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற முதல்-மந்திரிக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் மகிளா மோர்ச்சா சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, கருப்பு கொடி காட்ட முயன்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் நிகழ்ச்சி நடைபெற இருந்த இடம் நோக்கி பேரணியாக சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை போலீசார் தண்ணீரை பீச்சியடித்து கலைத்தனர். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பினராயி விஜயன், தனது சொந்த ஊரான கண்ணூரிலிருந்து நேற்று திருவனந்தபுரத்துத்திற்கு விமானம் மூலம் பயணம் செய்தார். இதற்காக கார் மூலம் அவர் விமான நிலையத்திற்கு சென்ற போது வழி நெடுகிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது திடீரென ஒரு தெருவுக்குள் இருந்து ஓடி வந்த இளைஞர் காங்கிரசார் பினராயி விஜயனுக்கு கருப்புக் கொடி காட்டி கோஷமிட்டனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதை அடுத்து விமானத்திற்குள் சென்று பினராயி விஜயன் அமர்ந்திருந்த நிலையில், உள்ளே இருந்த இளைஞர் காங்கிரஸ் மாவட்டச் செயலர் நவீன்குமார், தொகுதித் தலைவர் பர்தீன் மஜீத் ஆகியோர் அவரை ராஜினாமா செய்யக் கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த பினராயி விஜயன் ஆதரவாளர் அவர்களை கீழே தள்ளி விட்டார். இது குறித்து வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது. பின்னர் இருவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும் பினராயி விஜயன் விமான நிலையத்திலிருந்து வெளியேறியபோது, அங்கு காத்திருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக இளைஞரணித் தொண்டர்கள் கருப்புக் கொடிக் காட்டினர். பினராயி விஜயன் செல்லும் இடமெல்லாம் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவது கேரளா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.