கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை தொடக்கம்!

நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாரத் கவுரவ் என்ற திட்டத்தின் கீழ் பாரம்பரியமிக்க மற்றும் ஆன்மிக மையங்களுக்கு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை தொடக்க விழா வடகோவை ரெயில் நிலையத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த ரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ், தென்னக ரெயில்வேயின் தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார், சேலம் கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கோவையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம் எலஹங்கா, தர்மாவரம், மந்த்ராலயம், வாடி வழியாக நாளை (வியாழக்கிழமை) காலை 7.25 மணிக்கு சீரடிக்கு சென்றடைகிறது. இந்த ரெயிலில் படுக்கை வசதி, 3 அடுக்கு குளிர்சாதன வசதி, 2 அடுக்கு மற்றும் முதல் அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன. முதல்நாளான நேற்று இந்த ரெயிலில் மொத்தம் 1,100 பேர் சீரடிக்கு சென்றனர். அங்கிருந்து அந்த ரெயில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7.25 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு வடகோவை வந்தடைகிறது. நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு முற்றிலும் தனியார் சார்பில் ரெயில் இயக்கப்படுவதை வரவேற்றாலும் டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதற்கிடையே கோவை-சீரடி தனியார் ரெயில்சேவையை கண்டித்து சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், ஈரோடு ரெயில்வே பணிமனையில் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது,கோவை சீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விற்றதை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும். பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ரெயில்கள் என்ற பெயரில் 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனே கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ரெயில்வே பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.