ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதி ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும். அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. இன்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியோ, எதிர்க்கட்சிகளோ தங்களது வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆலோசனைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பணி அதிகாரி முகுல் பாண்டே, இணைச்செயலாளர் சுரேந்திரகுமார் திரிபாதி ஆகியோர் துணை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலுக்காக மாநிலங்களவையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் 4,809 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட உள்ளனர்.