பசவராஜ் பொம்மை கருத்துக்கு துரைமுருகன் மறுப்பு!

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்வதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்து கூறியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு, மேகதாது அணையை கட்டும் திட்டம் தொடர்பாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். அதில், காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதற்குதான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மேகதாது அணைக்கான திட்டப் பணிகள் குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பது சரியல்ல. மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தார்.

இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசியல் செய்கிறது. இதுவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் இறுதி கட்டத்தில் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.

இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளதாவது:-

மேகதாது அணை பிரச்சனை தமிழக விவசாய குடிமக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனை. இதை அரசியலாக்கும் அவசியமோ, எண்ணமோ, தமிழ்நாடு அரசிற்கு இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேகதாது விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதை அரசியல் ஆதாயத்திற்கு என்று கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.

கர்நாடக அரசு பெங்களூரு மாநகர குடிநீர் தேவைக்கான கட்டமைப்புகளை ஏற்கனவே முடித்துள்ள நிலையில், குடிநீர்த் தேவை என்ற போர்வையில் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட முயற்சிப்பது ஏற்புடையதல்ல. உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சனை குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானது. ஆகையால், உச்சநீதிமன்றம் இப்பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் வரை மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.