ஆட்சி மாற்றம் நிகழும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் நலத்திட்டங்கள் வாயிலாக பயனடைந்தவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதில் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களை கெளரவித்தனர். இதில் பங்கேற்ற அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை, மத்திய அரசின் மூலமாக நன்மை அடைந்த பயனாளிகளுடன் கொண்டாடி வருகிறோம். தமிழகம் முழுவதும் 15 நாட்களாக நடைபெற்று வந்த கொண்டாட்டம் இன்றுடன் முடிவடைகிறது.
நேஷனல் ஹெரால்டு வழ்க்கில் ராகுல் காந்தியை நேரில் அழைத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது, இதில் தேவையில்லாத போராட்டத்தை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், எம்பிக்கள் நடத்தி வருகின்றனர். தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் பெயரும் அடிப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசாத தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் ராகுல் காந்தியை அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதை மட்டும் பெரிதாக்குகின்றனர்.
தமிழக முதல்வருக்கு எதிராக கருத்து பதிவு செய்தால் அன்றைய தினம் நள்ளிரவு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாஜகவினர் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு போலீஸ் துறையை ஏவல் துறையாக மாற்றியுள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் அக்னிவீர் பாணியில் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.
பிஜிஆர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டர்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? Tangedco டெண்டர்களை பிஜிஆர் நிறுவனத்துக்குதான் கொடுக்க வேண்டும் என முதல்வர் கூறினாரா இல்லையா? மூன்று ஆண்டுகள் வேண்டுமானால் திமுக தப்பிக்கலாமே தவிர அரசு மாறும்போது முதல் கைது மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான்.
சீரடிக்கு போகும் வழக்கமான இரயில் ஏதும் நிறுத்தப்படவில்லை. தனிப்பட்ட மனிதன் செலவு செய்து செல்கிறார். அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தமிழகத்தின் லலுவான பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. அதன் உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிடாது. இவ்வாறு அவர் கூறினர்.