ஜம்மு – காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அப்பாவி மக்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர், போலீசார் போன்றவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் இடையே பீதி நிலவுகிறது. மறுபுறம் தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சிகளில் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் கோகர்நாக்கின் ஹங்கல்குண்ட் பகுதியில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இருவரும் பாஜகவின் ஊராட்சித் தலைவர் ரசூல் தார் மற்றும் அவர் மனைவியை கடந்த ஆண்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர்கள் என்றும் குல்காம் மாவட்டத்தில் கடந்த மாதம் ஆசிரியை ரஜினி பாலாவை சுட்டுக் கொன்ற வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்றும் காவல்துறை ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அதே போல் குல்காம் மாவட்டத்தில் மிஷிபோரா-குஜ்ஜர் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.