75 நாள்களில் 75 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
‘சர்வதேச கடலோரத் துப்புரவு நாள் 2022’ செப்டம்பர் 17 அன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி அதுகுறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:-
நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெறும் இந்த வேளையில், 75 நாள்கள் கடலோரத் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்படும். கடற்கரைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 75 நாள்கள் நடைபெறும் இந்த கடலோரத் தூய்மை இயக்கம் இதுவரையில்லாத மிகப்பெரிய இயக்கமாக இருக்கும். இதில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்க வேண்டும். இந்த இயக்கத்தின் இலக்கு கடற்கரைகளிலிருந்து 1,500 டன் குப்பைகளை அகற்றுவதாகும். கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் நிவாரணமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.