அரசு அதிகாரியை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி, மன உளைச்சலை ஏற்படுத்திய, அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி.,க்கு, தேசிய எஸ்.சி., – எஸ்.டி., கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரில், மார்ச்சில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார். அவரை வரவேற்க, முதுகுளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றனர். அப்போது, ராஜகண்ணப்பன், ராஜேந்திரனை ஜாதியை சொல்லி திட்டியதோடு, ‘நீ ஒரு பி.டி.ஓ., நான் சொல்வதை நீ கேட்க மாட்டே; சேர்மன் சொல்றததான் கேட்பே. உன்னை மாவட்டம் விட்டு மாவட்டம் மாத்திடுவேன்’ என, மிரட்டியதாக கூறப்படுகிறது. ‘அமைச்சர் திட்டியதால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்’ என, ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்த சூழலில், சென்னை எழிலகத்தில், போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கட்டு கட்டாக பணம் சிக்கிய நிலையில், ராஜகண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்து துறை பறிக்கப்பட்டது; பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில், புரட்சி தமிழகம் என்ற கட்சியை நடத்தி வரும், ஏர்போர்ட் மூர்த்தி என்பவர், டெல்லியில் உள்ள, தேசிய எஸ்.சி., – எஸ்.டி., கமிஷனில் புகார் அளித்துள்ளார். அதில்,’அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய ராஜகண்ணப்பனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற, தேசிய எஸ்.சி., – எஸ்.டி., கமிஷன், ராமநாதபுரம் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ‘ராஜகண்ணப்பன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது. இதனால், ராஜகண்ணப்பனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.