கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மூச்சுக் குழாவில் பூஞ்சை தொற்று இருப்பதாக அக்கட்சி விளக்கமளித்துள்ளது.
காங்கிரஸ் தலைவரான சோனியா கடந்த வாரம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா உள்ளிட்டோருக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்கள் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையே சோனியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கடந்த 12ம் தேதி முதல் டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சோனியாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் ஜூன் 12ம் தேதி சோனியாவுக்கு மூக்கில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனியா காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோனியா காந்தியின் சுவாச மண்டலத்தில் பூஞ்சை தொற்று பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.