தெலங்கானாவில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் சுட்டதில் ஒருவர் பலி!

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் சுட்டதில் ஒருவர் பலியானார்.

ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ராணுவ பணிக்கு தேர்ந்தெடுக்கும் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் மாநிலத்தில் நேற்று ரயில்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதன் எதிரொலியாக பிகார், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் அக்னிபாத்துக்கு எதிராக ஆயிரகணக்கான இளைஞர்கள் திரண்டு இன்று போராட்டம் நடத்தினர். செகந்திராபாத்தில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர்.
அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டகாரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீசார் இருவர் காயமடைந்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தெலங்கானாவில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அம்மாநில முதல் மந்திரி நிவாரணம் அறிவித்துள்ளார்.

தெலுங்கானா ரெயில் நிலையத்தில் நேற்று போராட்டம் தீவிரமடைந்தது. வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தெலங்கானா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ரெயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர், ரெயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டு என எதுவும் பலன் தராத நிலையில் அவர்கள் வலுக்கட்டாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றார்.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராகேஷ் என்பவரின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராகேஷ் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், மேலும் அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல் மந்தி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.