‘ஒற்றைத் தலைமை’ குறித்து பேசியதற்கு நடவடிக்கை என்றால், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
‘ஒற்றைத் தலைமை’ குறித்த தொண்டர்களின் மனநிலையைத் தான் எடுத்துக் கூறினேன். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதைத் தான் சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இது வெளிப்படைத்தன்மையாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். கட்சி நடவடிக்கை எடுக்கும் என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படும் ஆள் ஜெயக்குமார் அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, எனக்கு எவ்வளவோ பதவி கொடுத்து அழகு பார்த்தார்கள். எனக்கு பதவி வெறி இல்லை. அடிமட்டத் தொண்டனாக இருந்து கட்சிக்கு உழைப்பேன். ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா என்பது குறித்து முடிவு செய்ய கட்சிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதை முடிவெடுக்கும் நபர் நான் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.