செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் மோடி, டெல்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நேற்று தொடங்கி வைத்தார்.
சர்வதேச ஒலிம்பிக் சங்கமான எப்.ஐ.டி.ஈ ஒலிம்பிக் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கியுள்ளது. செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு உள்ள தொடர்பை மேலும் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஜோதி தொடர் ஓட்டம் இனி எப்போதும் இந்தியாவிலிருந்தே தொடங்கி போட்டி நடைபெறும். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நேற்று நடந்த விழாவில், எப்.ஐ.டி.ஈ தலைவர் அர்கடி துவார்கோவிச் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடியிடம் வழங்க, அவர் அதனை கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும் 40 நாட்களுக்குள் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஏற்றிவைக்கப்படும். அனைத்து இடங்களிலும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் இந்த ஜோதியை பெற்றுக் கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
செஸ் விளையாட்டு இந்தியா வழியாக உலகின் பல நாடுகளை அடைந்து மிகவும் பிரபலமாகி உள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாட்டின் 75 நகரங்களுக்கு எடுத்து செல்லப்படும். ஒவ்வொரு செஸ் காய்களுக்கும் தனித்தனியான பலம் இருப்பதைப் போலவே, அதற்கு தனித்திறமையும் உண்டு. செஸ் போட்டியில் சரியான நகர்வைச் செய்து அதன் சக்தியை சரியாகப் பயன்படுத்தினால் அது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும். குறுகிய கால வெற்றிக்கு பதிலாக தொலைநோக்கு சிந்தனை உள்ளவர்களுக்கு உண்மையான வெற்றி கிடைக்கும் என்று செஸ் விளையாட்டு சொல்கிறது.
இதுவரையிலான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்த முறை அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த முறை இந்தியா பதக்கங்கள் பெற்று புதிய சாதனை படைக்கும். புதிய இந்தியாவின் இளைஞர்கள் ஒவ்வொரு விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறார்கள். இப்போது நாங்கள் 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மற்றும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் ஆகியவற்றை மனதில் வைத்து செயல்படுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில், “செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து பணிகளும் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியால் துவங்கப்பட்டுள்ள இந்த ஜோதியானது நாடு முழுவதும் 75 நகரங்களை சென்றடைந்து தமிழகத்திற்கு வரும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஜூலை 28ம் தேதி ஒப்படைக்கப்படும்” என தெரிவித்தார்.