அக்னிபத் குறித்து தவறான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது. இந்த போராட்டம் மற்றும் வன்முறைக்கு பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்து விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன. இந்த நிலையில் அக்னிபத் திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பிய சமூக ஊடக கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 35 வாட்ஸ்அப் குழுக்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. எனினும் இந்த வாட்ஸ்அப் குழுக்கள் பற்றிய விவரங்களோ அல்லது அவற்றின் அட்மின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவல்களோ எதுவும் வெளியிடப்படவில்லை.
‘அக்னிபாதை’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாநிலங்களில் வெடித்துள்ள போராட்டங்களால் பல கோடி ரூபாய் ரயில்வே சொத்துகள் சேதமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த போராட்டங்களில் ஈடுபட்டுவரும் இளைஞர்களின் முதல் இலக்காக ரயில்களே உள்ளன. பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களில், அக்னிபாதைக்கு எதிராக நிகழ்ந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
குறிப்பாக பிகாரில் மட்டும் 60 பெட்டி பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. 11 என்ஜின்கள் எரிக்கப்பட்டுள்ளதுடன் 15 மாவட்டங்களில் ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன என்பது தெரிய வந்துள்ளது. பிகாரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் மேலும் போராட்டக்காரர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.