பினராயி விஜயனை தொலைபேசியில் அழைத்து நன்றி சொன்ன முதல்வர்!

கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை தீர்ப்பதற்காக சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை திறந்துவிட்டமைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் (19-6-2022) எழுதிய கடிதத்தில், சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்கள் இக்கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இந்த வேண்டுகோளுக்கிணங்க, கேரள அரசு, சிறுவாணி அணையிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சியன் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை நேற்று (20.6.2022) உடனடியாக திறந்துவிட்டுள்ளது.

இந்த நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை தீர்த்து வைத்ததற்காகவும், இரு மாநிலங்களுக்கிடைய ஆன ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை வழங்கியமைக்காகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க, கேரளா அரசு சிறுவாணி அணையில் இருந்து போதிய நீரை திறந்து விட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாநகராட்சியின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு, போதிய அளவு நீர் வழங்க இயலும். கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இரு மாநிலங்களுக்கு இடையே ஆன ஒப்பந்தத்தின்படி வேண்டிய நீர் வழங்கிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.