மகாராஷ்டிராவில் 21 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைமறைவு!

மகாராஷ்டிர மாநிலத்தில், ஆளும் கூட்டணி அரசு மீது அதிருப்தி காரணமாக, மாநில அமைச்சர் உட்பட 21 எம்எல்ஏக்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமேலவை தேர்தலில், ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சியுமான பாஜக, தலா 5 இடங்களில் வெற்றி பெற்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில அமைச்சரும், சிவசேனா கட்சி மூத்தத் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீது கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தானே பகுதியில் செல்வாக்குமிக்கவராக உள்ள ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன், சுயேட்சை எம்எல்ஏக்கள் உட்பட 22 சிவசேனா எம்எல்ஏக்கள் உடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தது போல், மகாராஷ்டிர மாநிலத்திலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. ஆனால் பாஜகவின் அந்த சதித்திட்டம் இங்கு நடக்காது. சூரத்தில் உள்ள சில எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் வெளியே வர சிலர் தடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன், 5 சுயேட்சை எம்எல்ஏக்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அமைச்சர் உட்பட 22 பேர், கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறும் பட்சத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை இழப்பதோடு மட்டுமல்லாமல், ஆட்சியை பறிகொடுப்பார். இந்த விவகாரம் மகாராஷ்டிர மாநில அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.

இந்நிலையில் இன்று, டெல்லியில் இது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. முதலமைச்சர் மற்றும் சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே மீது தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. தற்போதைய நெருக்கடிக்கு ஆளும் கூட்டணி தீர்வு காணும். மகாராஷ்டிரா அரசு சுமுகமாக இயங்குகிறது. ஏக்நாத் ஷிண்டே, தான் முதலமைச்சராக விரும்புவதாக எங்களிடம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. இது சிவசேனாவின் உட்கட்சி விவகாரம். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் ஆதரவு அளிப்போம். அரசில் எந்த மாற்றமும் தேவை என நாங்கள் கருதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இன்று இரவு மும்பையில், மகாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.