தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி கடலூரைச் சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த வழக்கில் தங்களையும் இணைத்து மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமைச் செயலாளர், உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

சமத்துவமான கல்விமுறை கல்வி என்பது மாநில கொள்கை சார்ந்தது. தேசிய கல்விக் கொள்கை என்பது எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லாத வரைவு கொள்கையாக உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து சமத்துவமான கல்விமுறை உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கையும், தாய்மொழியில் அடிப்படைக் கல்வியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மொத்த மாணவர் சேர்க்கை விகிதமானது தற்போது தமிழ்நாட்டில் 51.4 சதவீதமாக உள்ளது. ஆனால், தேசிய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை 27.1 சதவீதத்தில் இருந்து 2035-ம் ஆண்டு 50 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்தில் தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 மாநிலங்களில் தேசிய சதவீதத்தைக் காட்டிலும் குறைவான மாணவர்கள் சேர்க்கை உள்ளது. ஆனால், தமிழ்நாடு கல்வியில் 15 ஆண்டுகளுக்கு முன்னோக்கி பயணித்து வருகிறது. இங்கு தேசியக்கல்வி கொள்கையை அமல்படுத்தினால் அது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், இடைநிற்றல் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் வரலாற்று மரபுகள், தற்போதைய சூழல், எதிர்கால விருப்பங்களை கருத்தில்கொண்டு மாநில கல்விக் கொள்கையை வகுக்க டெல்லி ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இரு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.