வெள்ளத்தால் தத்தளிக்கும் அசாம்: பேரிடர் மீட்பு படைகள் விரைந்தன!

வடகிழக்கு மாநிலமான அசாம், தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தொடர்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

தொடர் கனமழையால் அசாம் மாநிலத்தின் 36 மாவட்டங்களில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 48 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். பிரம்மபுத்திரா, பராக் மற்றும் அவற்றின் துணை நதிகள் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், இதுவரை 82 பேர் பலியாகி இருக்கின்றனர். 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர், 7 பேர் காணாமல் போயுள்ளனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர், 27 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகளும் மீட்கப்பட்டுள்ளன. பராக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கரிம்கஞ்ச், கச்சார் மாவட்டங்கள் குறிப்பாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ‘ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து பராக் பள்ளத்தாக்கின் சில்சார் பகுதிக்கு மொத்தம் 105 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 பிரிவுகள் வந்துள்ளன. அவை மீட்பு பணிகளை மேற்கொள்ளும்’ என முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். தக்க சமயத்தில் இந்த உரிய உதவியை அளித்ததற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மேகாலய மாநிலம் தெற்கு காரோ மலை மாவட்டத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 4 வயது குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக அந்த மாவட்ட அரசு அதிகாரிகள் கூறியதாவது:-

வங்கதேச எல்லையையொட்டி தெற்கு காரோ மலை மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் பலத்த மழையைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் நிகழ்ந்துள்ளது. முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலை-62 சேதமடைந்துள்ளதால், இந்த மாவட்டம் மாநிலத்தின் பிற பகுதிகளிடம் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. 6 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மாவட்டத்தில் கைப்பேசி சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கருகோல், சிஜு, ரோங்காரா உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள போல்சல்கிரே, சிஜு, ரோங்சா அவே ஆகிய இடங்களில் நிலச்சரிவில் சிக்கி 4 வயது குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர். ரோங்சா அவேயில் நிலச்சரிவில் சிக்கிய இருவர் தேடப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில முதல்வர் கான்ராட் சங்மா புதன்கிழமை(இன்று) நேரில் பார்வையிட உள்ளார். அப்போது நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ.4 லட்சம் வழங்க உள்ளார் என்று தெரிவித்தனர்.