இலங்கைக்கு ரூ. 67.70 கோடி உணவுப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 67.70 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, தமிழக மக்களின் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். அதனடிப்படையில், முதல்கட்டமாக கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து ரூ. 32.94 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடா், மருந்துப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, இரண்டாம் கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சரக்குக் கப்பலில் ரூ. 48.30 கோடி மதிப்பிலான 14,712 டன் அரிசி, ரூ. 7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடா், ரூ. 11. 90 கோடி மதிப்பிலான உயிா்காக்கும் மருந்துப் பொருள்கள் என மொத்தம் ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15ஆயிரம் டன் அத்தியாவசியப் பொருள்கள் நேற்று புதன்கிழமை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வஉசி துறைமுகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் கொடியசைத்து அனுப்பி வைத்தனா். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், எம்.சி. சண்முகையா, அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் ஜெசிந்தா லாசரஸ், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.