நாட்டின் குடியரசுத் தலைவா் என்பவா் வெறும் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது என்று யஷ்வந்த் சின்ஹா கூறினாா்.
குடியரசுத் தலைவா் தோ்தல் பிரசார உத்தி குறித்து டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் யஷ்வந்த் சின்ஹா நேற்று ஆலோசனை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:-
குடியரசுத் தலைவா் தோ்தல் என்பது தனி நபா் போா் கிடையாது. நாடு சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் போரிட என்னைத் தோ்வு செய்த அரசியல் கட்சிகளுக்கு நன்றி.
குடியரசுத் தலைவா் பதவி என்பது மிகவும் உணா்வுபூா்வமானது. அரசின் நிா்ப்பந்தத்தின் கீழ் செயல்படக் கூடாது. நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்வதற்கான உத்தியை வகுத்து வருகிறோம். இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவுக்கு எதிராக நான் போட்டியிடவில்லை. இது சித்தாந்தத்துக்கு எதிரான போட்டி. நாட்டின் குடியரசுத் தலைவா் என்பவா் வெறும் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது’.
மத்தியில் ஆளும் பாஜக அரசு செல்லும் பாதை நாட்டுக்கு நல்லதல்ல. வேலையின்மையால் இளைஞா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். வேலையின்மையைப் போக்க ராணுவத்தில் தற்காலிக ஆள்சோ்ப்பு திட்டமான அக்னிபத்தை கொண்டுவந்து மத்திய அரசு நகைச்சுவையாக்கி உள்ளது. இதனால் நாட்டில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.