தமிழக அரசின் தாய்-சேய் நல பெட்டக ஒப்பந்தத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசு மருத்துவமனையில் பிறக்க கூடிய குழந்தைகளுக்கு 15 பொருள்களுடன் கூடிய தாய்-சேய் நல பெட்டகம் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கான பொருள்களை பல்வேறு நிறுவனங்களிலிருந்து பெற்றுவந்த நிலையில், இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை எதிா்த்து தஞ்சாவூரைச் சோ்ந்த ஸ்ரீ சாந்தி சா்ஜிக் கோ் என்ற நிறுவனம் உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக் கொண்டு, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் தாய் – சேய் நல பெட்டக ஒப்பந்தம் தொடா்பாக மனுதாரா் எவ்விதமான குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்கவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். இந்த ஒப்பந்தத்தை வேறு நிறுவனங்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.