முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சிகள் டெண்டர் முறைகேட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ரூ.811 கோடிக்கு டெண்டர் விட்டதில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னை மற்றும் கோவையில் சாலைகள் அமைப்பதற்கான டெண்டர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான எஸ்.பி.பில்டர்ஸ் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டது. இதில் விதிமுறைகள் முற்றிலுமாக பின்பற்றப்படவில்லை. தொழில் நுட்பரீதியான விதிகள் டெண்டரில் பின்பற்றப்படவில்லை. 2017-2018ல் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணியமர்த்தியது தொடர்பான டெண்டரிலும் முறைகேடு நடந்துள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கான டெண்டரை அனுமதிக்கப்பட்ட அளவை விட 330 சதவீதம் கூடுதல் தொகைக்கு ஒதுக்கப்பட்டது. வரதன் இன்பிராஸ்டக்சர் என்ற நிறுவனத்திற்காக டெண்டர் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் வேலுமணியின் வீடுகள், அவரது உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் ரூ.811 கோடி டெண்டர் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இந்த முறைகேட்டுக்கு துணைபோன அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது பல பூதாகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகாரில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆவணங்களும் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கியுள்ளது. அதன் அடிப்படையில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகளை இந்த வழக்கில் சேர்க்க லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளது. இந்த வரிசையில் சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரகாஷ், கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த விஜய் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்களாக இருந்த கந்தசாமி, மதுசூதன் ரெட்டி ஆகியோர் முறைகேட்டுக்கு உதவியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளராக இருந்த நந்தகுமார், தலைமை பொறியாளர் செந்தில்நாதன் ஆகியோரும் லஞ்ச ஒழிப்பு துறையின் வளையத்திற்குள் வந்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில் பொது ஊழியர்களாக இருக்கும் அதிகாரிகள் அரசுக்கு இழப்பை ஏற்படுத்த துணை போனது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, எஸ்.பி.வேலுமணி வழக்கில் 10 வாரங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கடந்த 2021 நவம்பரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்பு துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்த அனுமதி கிடைத்ததும், அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது போதிய ஆதாரங்கள் இருப்பதால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்கலாம் என, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அரசு அனுமதி அளித்த பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு அழைக்கப்படுவர். விசாரணைக்கு பின், முறைகேடுக்கு உதவியது உறுதியானால் காப்பு கட்டவும், போலீசார் தயாராக உள்ளனர். மேலும், அவர்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் கைது செய்யப்படுவார் என, லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரம் கூறுகிறது. இந்த தகவல், வேலுமணி தரப்பில் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.