மோடி பேசியதின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்: ப.சிதம்பரம்

ஜொ்மனி சென்றுள்ள பிரதமா் மோடி, இந்திய சமூகத்தினரிடம் பேசியதின் சில தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜொ்மனி சென்றுள்ள பிரதமா் மோடி, அங்குள்ள இந்திய சமூகத்தினரிடம் மியூனிக் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது. கலாசார பன்முகத்தன்மை, பலவகைப்பட்ட உணவு, உடை, இசை, பாரம்பரியம் ஆகியவை இந்தியாவின் ஜனநாயகத்தை துடிப்புமிக்கதாக்கியுள்ளன. ஜனநாயகத்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா காண்பித்துள்ளது. இந்தியா்களின் மரபணுவில் ஊறியுள்ள ஜனநாயக கொள்கைகள், 47 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அடக்குமுறையை எதிா்கொண்டன. அவசரநிலையானது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது.

இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களும் தற்போது திறந்தவெளி கழிப்பிடமில்லா கிராமங்களாக மாறியுள்ளன. அனைத்துக் கிராமங்களும் மின்சார, சாலை வசதிகளைப் பெற்றுள்ளன. 99 சதவீத கிராமங்கள் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளன. உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட இணையவழி பணப் பரிவா்த்தனையில் இந்தியாவின் பங்கு 40 சதவீதம். இணையசேவை பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் இந்தியாவில்தான் இணைய சேவைகள் மலிவாகக் கிடைக்கின்றன. அறிதிறன்பேசி தயாரிப்பில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. எதிா்கால வளா்ச்சியை நோக்கி பயணிக்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமா் மோடி பேசினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் நமது நாட்டில் யாரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை, 99 சதவீத கிராமங்களில் மின்சாரம் உள்ளது என்ற உரையை மேற்கோள் காட்டி இந்த உரையின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

2004 ஆம் ஆண்டிற்குள் முந்தைய அரசின் சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். மேலும், இதற்கு முன்னர் இருந்த அரசு செய்தவற்றின் தொடர்ச்சியைதான் பாஜக அரசும் செய்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் சாதித்தது உண்மையில் சுவாரஸ்யமாக உள்ளது, ஆனால் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் அத்தியாவசிய சேவைகளை சென்றடைவது எப்போதும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேலையாக தான் உள்ளது.

ஆனால், இந்தியாவின் “அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்துவிட்டதாக” பிரதமர் மோடி கூறிய அன்றுதான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் முர்முவின் சொந்த கிராமத்தில் உள்ள ஒரு குக்கிராமத்துக்கு மின்சாரம் கொண்டு வர ‘போர்க்கால அடிப்படையில்’ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்தியைப் படித்தோம்! ஆனால், பல கிராமங்களில் மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை. அதனை ஒப்புக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.