உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றசம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-
மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக உண்மை பேசுபவர்களை பாஜக அரசு குறிவைக்கிறது. எளிய மக்களாக இருந்தாலும், அவர்களை துன்புறுத்துகின்றனர். மத்திய அரசின் இந்த செயல்பாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளில் எளிய மக்களும், தொழில்துறையினரும் லட்சக்கணக்கில் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். தனக்கு என்ன தேவையோ அதை அடைய பாஜக அரசு எதையும் செய்யும், இதற்காகவே, உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது.
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை, நிதி மோசடி வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதேபோல், சமூக ஆர்வலரான தீஸ்தா செதல்வாத், குஜராத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேர்க்கப்படும் அக்னி வீரர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக நீட்டிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பா.ஜனதாவை போல இல்லாமல், அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அக்னிபத் திட்டத்தில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி வழங்கப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்? எனவே இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் வீரர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக நீட்டிக்க வேண்டும்” என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே, பாதுகாப்பு படையில் ஆட்களை சேர்க்கும் இந்த புதிய திட்டத்தை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.