ராபர்ட் பயஸ் உடல்நிலை மோசமாக உள்ளது: அற்புதம்மாள்

ராபர்ட் பயஸ் உடல்நிலை மோசமாக உள்ளது. உடனடியாக வெளியே வந்தால் தான் நல்லது என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வந்தனர். இதனிடையே, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். ராபர்ட் பயஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்தித்து நலம் விசாரித்தார் அற்புதம்மாள். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராபர்ட் பயஸ் உடல்நிலை மோசமாக உள்ளது. உட்கார்ந்து கூட பேச முடியவில்லை. உடனடியாக வெளியே வந்தால் தான் நல்லது. பரோலுக்கும் முயற்சி செய்கிறார். பரோல் கிடைக்கும் என நம்புகிறேன். உடல்நிலை மோசமாக உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு உடனடியாக பரோல் வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். எனது மகனுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தான் சிகிச்சை பார்க்க பரோல் கேட்டேன். அதுபோன்று தான் இப்போதும் ராபர்ட் பயஸ் உடல்நிலை மோசமாகியுள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு முதல்வர் பரோல் வழங்க கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

பேரறிவாளன் விடுதலைக்கு பின்னர் நிலைமை மாறியுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி, அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் அற்புதம்மாள் அப்போது தெரிவித்தார்.

இளமை முழுவதும் சிறையிலேயே தொலைத்து விட்ட பேரறிவாளன், தற்போதுதான் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளார். தனது எதிர்காலத்தை திட்டமிடவுள்ளார். அவருக்கு அற்புதம்மாளையும் தாண்டி ஒரு வாழ்க்கை துணை தேவைப்படுகிறது. எனவே, அவர் விடுதலையானது முதலே அவரது திருமணம் தொடர்பான எதிர்பார்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், அற்புதம்மாளிடம் பேரறிவாளனின் திருமணம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “பேரறிவாளனுக்கு திருமணம் பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. பேரறிவாளனுக்கும் விருப்பம் இருக்க வேண்டும். ஆனால், அவர் முழு நிம்மதியுடன் இருக்கவில்லை. நம்மை போல் பாதிக்கப்பட்டவர்கள் சிறையில் இருக்கும் போது, தான் மட்டும் விடுதலையாகி வெளியே இருப்பதால் அவர் கவலையில் இருக்கிறார். அனைவரும் வெளியே வந்தால் தான் நமக்கு மகிழ்ச்சி என்கிறார். பேரறிவாளனுக்கு கிடைத்த தீர்ப்பால் அனைவருக்கும் விரைவில் நன்மை நடக்கும். முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.” என்றார்.