சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் மற்றும் குஜராத் முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரை போலீஸ் காவலில் விசாரிக்க அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2002ஆம் ஆண்டில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., இஷான் ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு அமைப்பினர், பிரதமர் மோடி உள்பட 64 பேரை விடுதலை செய்தது.
இதனை எதிர்த்து, இஷான் ஜாப்ரியின் மனைவி, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் மோடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்தது. குஜராத் கலவரத்தில் பெரிய சதி நடந்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுவானது மறைமுக உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “குஜராத் வன்முறைகள் தொடர்பான பொய்களை பிரதமர் மோடி தாங்கி கொண்டார். பொய்யான குற்றச்சாட்டுகளால் அவர் மனமுடைந்து போயிருந்தார். இப்போது பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை என உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.” என்று கூறி தீர்ப்பை வரவேற்றார்.
இதன் தொடர்ச்சியாக, 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி அவதூறு வழக்குகள் தொடர்ந்ததாக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், குஜராத் முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், ஏற்கனவே போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் மீது குஜராத் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் மும்பையில் கைது செய்யப்பட்டு, குஜராத் மாநிலத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அதேபோல், ஆர்.பி.ஸ்ரீகுமார் குஜராத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரையும் அகமதாபாத் அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருகிற ஜூலை 1ஆம் தேதி வரை அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, கிரிமினல் சதி, மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் டீஸ்டா செதல்வாட், ஆர்.பி.ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோரிடம் விசாரணை நடத்த குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு டிஐஜி தீபன் பத்ரன் தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.